Sunday, November 16, 2008

469. அடிச்சுக்கிட்டு சாகட்டும் அப்படியே விடுங்க!

அடிச்சுக்கிட்டு சாகட்டும் அப்படியே விடுங்க!

முதல்வன் ஸ்டைலில் நடந்த நிஜம் ... சட்டக்கல்லூரியில் சிலையான போலீஸ்!


வன்முறையை முதலில் தெளித்தது எந்த சாதி? ரத்தத் தில் அதிகம் குளித்தது எந்த சாதி? இதுவல்ல பிரச்னை! புனிதமான கல்வி வளாகத்தினுள் கத்தியும், இரும்புக் குழாயும், உருட்டுக் கட்டைகளுமாக யுத்தத்தை அரங்கேற்றியிருப்பது, மாணவ சாதி! அதை சிலையாக நின்று வேடிக்கை பார்த்தது, போலீஸ் சாதி! இதுதான், 'இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?' என்ற கலவரத்தை ஏற்படுத்துகிறது!

சென்னை 'அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி'யில் கடந்த 12-ம் தேதி மாலையில் நடந்த கோர சம்பவம் மீடியாக்களின் வாயிலாக வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் பதைபதைப்பின் பிடியிலிருந்து இன்னமும் மீளாமல் தவிக்கிறது! 'இரண்டு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான், வெறித்தனமான இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம்' என்பது பதைபதைப்பைக் கணிசமாகவே கூட்டியிருக்கிறது.

தாக்குலில் படுகாயப்பட்ட பாரதி கண்ணன், ஆறு முகம், அய்யாதுரை ஆகிய மூன்று மாணவர்களும் சென்னை பொது மருத்துவமனையின் அடுத்தடுத்த படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டிருக்க... நாம் அங்கே விசிட் அடித்தோம்.

சட்டக் கல்லூரியின் நுழைவாயிலில் அடித்துத் துவைக் கப்பட்ட பாரதி கண்ணன் நைந்துபோய்க் கிடந்தார். ஒரு கையை கட்டித் தொங்கப் போட்டிருந்தார்கள். உடலில் காயம் இல்லாத இடமே இல்லை. பேசும் நிலையிலும் அவர் இல்லை. அங்கே இருந்த மாணவர்களிடம் பேசினோம். ''பெயர், போட்டோ போட்டுடாதீங்க...'' என்றபடி பேச ஆரம்பித்தார்கள்.

''பல வருடங்களாகவே சட்டக் கல்லூரியில் சாதி பிரச்னை மாணவர்களை சீரழிச்சுக்கிட்டு இருக்கு. ஹாஸ்டல் மாணவர்களுக்கும் ரெகுலர் மாணவர் களுக்கும் சச்சரவு வராத நாளே கிடையாது. எஸ்.சி. மாணவர்கள், எஸ்.சி. அல்லாத மாணவர்கள் என்று இரண்டு குழுக்களாகத்தான் செயல்படுறாங்க.

நாங்க 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருந்தோம். தேவர் ஜெயந்தி அன்று அடிக்கப்பட்ட நோட்டீஸில் கல்லூரியின் பெயரான அம்பேத்கர் பெயரைப் போடவில்லை. சம்பவத்தன்னிக்கு மாலையில் செமஸ்டர் எக்ஸாம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சாதி ரீதியான தேசிய கட்சி ஒன்றின் கொடி கட்டிய காரில் ஒரு கும்பல் கல்லூரிக்குள் வந்தது. அவர்கள் கல்லூரிக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவர்கள். அவர்கள் அந்தக் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் அடியாட்கள். அவர்கள்தான் இத்தனை அராஜகத்தையும் நடத்தினாங்க. அவர்களில் எங்கள் காலேஜ் ஓல்டு ஸ்டூடண்ட்ஸ§ம் இருந்தாங்க.

கல்லூரியின் இன்சார்ஜ் முதல்வரா இருக்கிற ஸ்ரீதேவ், ஏற்கெனவே விடுதியில் வார்டனா இருந்தவர். அவர் அனுமதி கொடுக்காமல் போலீஸ் கல்லூரிக்குள் வரமுடியாது. ஆனால், பிரின்சிபாலோ போலீஸை கூப்பிடவே இல்லை. போலீஸ் உள்ளே வர அவர் அனுமதித்திருந்தால், பிரச்னை இந்த அளவுக்குப் போகாமல் தடுத்திருக்கலாம். போலீஸ் இதில் தலையிடாது என்று தெரிந்தேதான் படிப்படியாகத் திட்டம் போட்டுக் காரியத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றியிருக்கிறார்கள்'' என்று சீறினார்கள்.

மருத்துவமனை வார்டுக்கு வெளியே பாதிக்கப்பட்ட கொதிப்பும் சோகமுமாக நின்றிருந்தனர், மாணவர்களின் உறவினர்கள். அவர்களில் ஒரு பெண் அங்கே நின்றிருந்த போலீஸாரைப் பார்த்து, ''டி.வி-யில பாத்துட்டு ரத்தமே கொதிக்குதுய்யா... பாவிங்களா! உங்க பொண்டாட்டி புள்ளைங்கள இப்படி நாயைப் போல அடிச்சா இப்படி வேடிக்கை பாத்துக்கிட்டா இருப்பீங்க? உங்களுக்கு எல்லாம் எதுக்கு காக்கிச் சட்டை? கழற்றி நெருப்புல போடுங்க..!'' என ஆத்திரப்பட... போலீஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை 'சட்டக் கல்லூரி வாசல் போஸ்' போலவே அசையாமல் நின்றார்கள்.

சீறிய, லில்லி கல்பனா என்ற அந்தப் பெண்ணிடம் பேசினோம். ''இங்கே இருக்கிற தமிழனையே போலீஸ் தலையிட்டுக் காப்பாத்த முடியல... இலங்கைத் தமிழனுக்காகக் கண்ணீர் விடுறானுங்க, இந்த அரசியல்வாதிங்க! அடிமேல அடி விழுகுறப்ப மனிதாபி மானத்தோட காப்பாத்த முடியாத போலீஸை வெச்சு என்ன அரசாங்கம் நடத்தி என்ன பிரயோசனம்?'' என்று குமுறினார்.

தாக்கப்பட்ட மாணவர் பாரதிகண்ணனின் (கத்தியுடன் பாய்ந்து சென்று, கடைசியில் நையப் புடைக்கப்பட்டவர்) தந்தை கருப்பசாமியிடம் பேசினோம். ''தேவகோட்டைக்கு பக்கத்துல என் சொந்த ஊர். நல்லா படிக்கணும்னு சென்னைக்கு மகனை அனுப்பினேன். டி.வி-யில பாத்துட்டுத் துடிச்சுப்போய் வந்தேன். ஹைகோர்ட்டு, கோட்டை, சட்டசபை எல்லாம் நடந்துகிட்டு இருக்கிற எடத்துக்குப் பக்கத்துலேயே இவ்வளவு கொடூரம் நடந்திருக்கு! இதை எல்லாம் பாக்குறப்போ, 'நாம தமிழ்நாட்டுலதான் இருக்கோமா.. இல்ல வேறு எங்கேயோ இருக்கோமா'னு நினைக்கத் தோணுது. சாதி மோதல்தான் காரணம்னு சொல்லுறாங்க... எந்த சாதியா இருந்தாலும் ஆளுறவங்கதானே காப்பாத்தணும்!'' என்றார்.

மாணவர்களில் சிலரை முதல் கட்டமாகக் கைது செய்திருக்கும் நிலையில், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த மாண வர்களோ, ''கிராமத்தைவிட்டு இங்கே படிக்க வந்தால், இங்கும் எங்களுக்கு எதிரான ஒடுக்குதல் தொடர்கிறது. அரசுத் தரப்பிலிருந்து எங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளைக்கூட கிண்டல் செய்கிறார்கள் சிலர். இதனால் எங்கள் தரப்பு மாணவர்கள் மத்தியில் எழும் குமுறலை, கல்லூரிக்கு வெளியே உள்ள சில சக்திகள் வசமாக விசிறிவிட்டு, தங்களுக்குச் சாதகமாகப் பல குழப்பங்களை அரங்கேற்றிக் கொள்கின்றன'' என்கிறார்கள்.

இப்போது சட்டக் கல்லூரி வளாகங்களில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கிறது; கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படிருக்கிறது. இருந்தும் கல்லூரிக்குள் மாணவர்கள் கொஞ்சம் பேர் இருந்தார்கள். ஒரு சில பேராசிரியர்களும் இருந்தனர்.

''இவ்வளவு நடந்தும் நீங்களாக போலீஸை அழைக்க வில்லையே, ஏன்?'' என அவர்களிடம் கேட்டோம்.

அவர்களோ, ''தேவர் ஜெயந்தி விழா அன்னிக்கு நடந்த பிரச்னை மறுபடி எதிரொலிக்கும்னு எதிர்பார்த்தோம். நேத்து பரீட்சை நடக்கும்போது கண்டிப்பா குறிப்பிட்ட மாணவர்கள் வருவாங்கனு தெரிஞ்சே அந்தக் கும்பல் தயாரா காத்திருந்தது. இவங் களும், தங்கள் மீது தாக்குதல் நடக்கலாம்னு தெரிஞ்சு கையில் ஆயுதங்களோடுதான் வந்திருந்தாங்க. மோதல் உறுதினு புரிஞ்சுகிட்டு, பகல் இரண்டரை மணிக்கே போலீஸ§க்கு தகவல் அனுப்பிட்டோம். இதோ பாருங்க ஆதாரத்தை!'' என்று சொல்லி, ஐ.ஜி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகாரின் அக்னாலஜ்மெண்ட் நகலை எடுத்துக் காட்டினார்கள்.

அங்கே இருந்த மாணவர் களிடம் பேசியபோது, ''டிகிரி முடிச்சிட்டு வர்றவங்க இங்கே மூணு வருஷம் படிக்கணும். ப்ளஸ் டூ படிச்சிட்டு வர்றவங்க ஐந்து வருஷம் படிக்கணும். இதுல ஐந்து வருஷம் படிக்கிற மாணவர்களுக்குள்ளதான் பிரச்னை அவ்வப்போது வெடிக்கும். இப்ப நடந்த சம்பவத்தைவிட மோசமான தாக்குதல்கள்கூட எங்க காலேஜுல நடந்திருக்கு. போன வருஷம் மே மாதம் 28-ம் தேதி அன்னிக்கு விடுதிக்குள்ள நடந்த கொலைவெறித் தாக்குதல் இதைவிட மோசமானது. குறிப்பிட்ட ஒரு சாதி பையன் இரும்பு நாற்காலியை சத்தம் வரும்படி நகர்த்திப் போட்டான்னு பிரச்னையை ஆரம்பிச்சாங்க. ஏகப்பட்ட ஸ்டூடன்ட்ஸ§க்கு ரத்த காயம். ஹாஸ்டலுக்கு உள்ளேயே கத்தி, உருட்டைக் கட்டையெல்லாம் தயாரா பதுக்கி வச்சிருக்காங்க. இப்போதைய சம்பவத்தின்போதும், சுமார் அஞ்சு கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஹாஸ்டலில் இருந்துதான் ஆயுதங்களை எப்படியோ காலேஜுக்குள் கொண்டாந்திருக்காங்க. மோதல்களுக்கான அடிப்படை எல்லாமே ஹாஸ்டலில் இருந்துதான் ஆரம்பிக்குது. இதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தணும்னா பிற்படுத்தப்பட்ட சமூகத்து ஸ்டூடன்ட்ஸ§க்குத் தனியா விடுதி கொண்டு வரணும்'' என்றார்கள்.

கல்லூரி ஊழியர்களிடம் பேசினோம். ''மயங்கிய பிறகும் பாரதி கண்ணன் அடித்துத் துவைக்கப்பட்ட நுழைவாயிலுக்கு முன்பு இளங்கோ என்பவர்தான் வாட்ச் மேனா இருந்தார். அவரை மூணு மாதத்துக்கு முன்பு எழும்பூர் மருத்துவமனைக்கு மாத்திட்டாங்க. அவர் மீது அன்பும் மரியாதையும் எல்லா மாணவர்களுக்கும் உண்டு. அவர் இருந்திருந்தா... ஒருவேளை இந்தளவுக்குப் பிரச்னை வளர்ந்திருக்காது. உள்ளேயும் அப்படித்தான். பிரின்சிபால், புரொபசர் எல்லாம் தடுத்தபோதும் அவங்களை ஒருமையில் மிரட்டித் துரத்திய மாணவர்கள், கடைசியில் கேண்டீன்ல வேலை பார்க்கும் ஒரு பெரியவர் தடுத்த பிறகுதான் கொஞ்சம் அடங்குனாங்க. அவர் தன்னோட துண்டைத் தரையில் எடுத்துப்போட்டு, 'இதைத் தாண்டி யாரும் வரக்கூடாது... இது என் மேலே சத்தியம்'னு கட்டளை போட்டார். சோறு போட்ட அவர் பேச்சுக்குத்தான் மாணவர்கள் ஓரளவு அடங்கினாங்க!'' என்றனர்.

அடுத்து அவர்கள் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்-

''கேட் பக்கத்துல நிறைய போலீஸ்காரங்க நின்னாங்க. இங்கே நடக்கிற மோதல் பத்தி உடனுக்குடன் கமிஷனர் ஆபீஸ§க்குத் தகவல் சொல்லி இன்ஸ்ட்ரக்ஷன் கேட்டுக்கிட்டே இருந் தாங்க. அப்ப போலீஸ் மைக் கிலிருந்து யாரோ பெரிய அதிகாரியிடமிருந்து, 'உத்தரவு வரும் வரை எதுவுமே செய்ய வேண்டாம்... அந்த காலேஜ் பசங்களுக்கு இதே பொழைப்பா போச்சு. அடிச்சுக்கிட்டு சாகட்டும்... அப்படியே விடுங்கய்யா!'னு ஒரு தகவல் வந்துச்சு. கிட்டத் தட்ட 'முதல்வன்' படத்தில் வர்ற காட்சி மாதிரியேதான் அது இருந்தது!'' என்றனர் அவர்கள்.

நெருப்பாக விவகாரம் தகிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, உதவி கமிஷனர் உட்பட சஸ்பெண்ட் என்று அறிவித்த அரசாங்கம்... 'சம்பவ ஸ்தலத்தில் இருந்த போலீஸார் சும்மா வேடிக்கை பார்க்க என்ன காரணம்?' என்று சில தகவல்களை நம்பகமான வட்டாரங்களில் இருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டதாம். அதைத் தொடர்ந்து, சென்னை மாநகர கமிஷனராக இருந்த சேகரை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றி, அங்கே ராதாகிருஷ்ணனை நியமித்துள்ளது. சென்னை வடக்கு இணை கமிஷனராக இருந்த அபய் குமார் சிங் மாற்றப்பட்டு விட்டார். கூடுதல் போலீஸ் கமிஷனராக ஏ.கே.விசுவநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னை வடக்குபொறுப்பையும் அவர்கவனிப்பார். சில நாட்களுக்கு முன்பே துணை கமிஷனராக நியமிக்கப் பட்ட ஆசியம்மாளையும் அங்கிருந்து அகற்றி, பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்துள்ளார்கள்.

இதற்கிடையே, சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறை வெறியாட்டம், சாதிய ரீதியில் தமிழகத்தின் மற்ற சில கல்லூரிகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இப்போது பல்வேறு மாவட்டங்களிலும் போலீஸ் அலர்ட்!

காயப்பட்ட மாணவர்களை அ.தி.மு.க. தரப்பினர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போக... ''இந்த அரசு முக்குலத் தோருக்கு ஏற்படும் இன்னல்களைக் களைவதில் அக்கறை காட்டுவதில்லை. போலீஸ் மெத்தனத்துக்கு சாதி ரீதியான காரணங்கள் உண்டு'' என்று சொல்லி சாதிய ரீதியான உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றுக்கும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றனவாம். இதில் மத்திய அமைச்சர் ஒருவரின் சகோதரர், எஸ்.பி-யாக இருந்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம்.

நன்றி: ஜுனியர் விகடன்

2 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

said...

மற்றவர்கள் கைகட்டி நின்றதைவிட அந்த கல்லூரி மாணவர்களே, தங்கள் கல்லூரி மாணவர்களை தடுக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் காட்சியில் தெரியும் அனைவரும் அவர்கள் கல்லூரி மாணவர்கள்.
நமக்கு மனம் துடிப்பதுபோல்கூட அவர்களுக்கு துடிக்கவில்லை.
மற்றவர்களை குறைகூட சிறிதும் யோக்கிதை கிடையாது. ஒட்டுமொத்த சமுதாயமும் வேடிக்கை பார்த்த மாணவர்களை மன்னிக்கவே கூடாது.அவர்களைத் தண்டித்தே தீர வேண்டும்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails